மாணவன் தூக்கிட்டு தற்கொலை உள்பட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை உள்பட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

Update: 2023-11-21 11:19 GMT

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எரியோடை அடுத்த கோவிலூர் மலேசியா முருகன் கோவில் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட உதயகுமார், காளிமுத்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்து 11 டூவீலர்கள்,  ரூ.72 ஆயிரம் பணம், 2 சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எரியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எரியோடு காவல்துறையினருக்கு தெரியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து எரியோடு காவல் நிலையத்தில் கைது செய்தவர்களை  டி.எஸ்.பி.துர்காதேவி ஒப்படைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுகந்தகுமார் (42) இவர், சவுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களின் 17 வயது மகன் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த சில தினங்களாக பள்ளிக்குச் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் மின்விசிறியில் போட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மெட்டூர் பகுதியை சேர்ந்த முத்துக்கண்ணி என்ற 108 வயதுடைய மூதாட்டி தன் கணவர் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை ஏமாற்றி வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீண்டும் பெற்றுத் தருமாறு மனு அளித்தார்.

Tags:    

Similar News