பழனி முருகன் கோயிலில் ஒரே நாளில் தங்க ரதம் இழுத்த 250 பக்தர்கள்
பழனி முருகன் கோயிலில் ஒரே நாளில் 250 பக்தர்கள் தங்க ரதம் இழுத்தனர்.
பழனி கோவிலில் நேற்று 250-க்கும் மேற்பட்டோர் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், சாதாரண நாட்களில் சராசரியாக 100 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள்.
சித்ரா பவுர்ணமி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபடுவார்கள்.
இந்நிலையில், விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இதனால், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காந்தி ஜெயந்தி விழா
திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விழா மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் தூய்மை பணியாளர்கள் 48 பேர் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் 2 பேர் என மொத்தம் 50 பேரை கௌரவ படுத்தும் விழா மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையிலும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நவராத்திரி விழா அக்.15ந் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் ,பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவராத்திரி விழாவில், அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் சம்ப்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும்.
சிறப்பு மருத்துவ முகாம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மகாத்மா காந்தி, பிறந்த தினத்தை முன்னிட்டு, மருத்துவ சிறப்பு முகாம் (ஆயுஷ்மான் பவ) மற்றும் தூய்மை பணி முகாம் (ஸ்வச்சதா ஹி சேவா) நடைபெற்றது. இந்நிகழ்வை, முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் அரவிந்த் நாராயணன் தலைமையேற்று நடத்தினார்.
மருத்துவர் அஞ்சு, முதன்மை மருந்தாளுனர் உதயகுமார், சித்த மருத்துவ மருந்தாளுனர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சுத்தம் சார்ந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவமனை செவிலியர்கள், நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.