கொடைரோடு அருகே தடுப்பூசி போட மக்கள் அதிகம் வருவதால் ஊழியர்கள் திணறல்
கடந்த சில தினங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகம் வருவதால், போதிய பணியாளர்கள் இன்றி ஊழியர்கள் திணறல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசியான கோவிட்ஷீல்ட் (covid Sheild) போடப்பட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த சில தினங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் பெண்கள் அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் தினம் தினம் குவிந்து வருவதாலும், அருகிலுள்ள சிப்காட் பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்களும் டோல்கேட் பணியாளர்களும் டிராக்டர் தயாரிப்பு தொழிற்சாலையும் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவதால் மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இன்றி மருத்துவர்கள் ஊழியர்கள் திணறினர்.
மேலும் நாளுக்கு நாள் கிராமப்புற பொதுமக்களிடையே 100 நாள் பணியாளர்களிடையே இளைஞர்களிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருவதால் இதைப் போல் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதால் மேலும் மருத்துவ பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.