ஆள்மாறாட்டம் மூலம் சொத்துப்பதிவு செய்த 6 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்;
திண்டுக்கல் அருகே ஆள்மாறாட்டம் மூலம் சொத்தை மாற்றி பதிவு செய்தவர் கைது
திண்டுக்கல் அருகே, சொரிப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள 2 1/2 நிலத்தை ரசிதா பேகம், உமரு நிஷா ஆகியோருக்கு தானமாக தந்தை பக்ருதீன் எழுதிக் கொடுத்தார். தம்பியான ஜமால்பாரூக் கடந்த 2022 ஆம் ஆண்டு செந்துறையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து 2 1/2 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் மாற்றினார். இதை அறிந்த ரஷிதா பேகம், மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அவர்களிடம் புகார் அளித்ததின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவி மேற்பார்வையில் எஸ்.ஐ.-கள் சேகர்பவுல்ராஜ், செல்வராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜமால் பக்ருதீன், உம்முகுலுதுபீவீ, மும்தாஜ், அபுதாகிர், சிவனேசபிரபு, செந்துறை சார்பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஜமால் பாரூக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அருகே லோன் பெற்றுத்தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி
திண்டுக்கல், சாணார்பட்டி அருகே உள்ள பெரியகோம்பைபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமிகள் சிலர் காரில் வந்து அங்குள்ள பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், முன்பணமாக ரூ.2400 கட்டினால், ரூ.1லட்சம் பணம் கிடைக்கும். அதனை சிறுசிறு தொகைகளாக வங்கியில் செலுத்தலாம் என கூறினர். திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் தங்கள் அலுவலகம் உள்ளது எனக்கூறி டேப்லெட்டில் கூகுள் மேப் வரைபடத்தை காட்டி தங்களது கிளை அலுவலகம் பல இடங்களில் உள்ளதாக கிராம மக்களை நம்ப வைத்ததை தொடர்ந்து, அந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டினர். 2 நாட்களில் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த ஆசாமிகள் சொன்ன விலாசத்திற்கு வந்து பார்த்த போது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லையென தெரியவந்தது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.