நத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாக்குதலை கண்டித்து, நத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சில தினங்களுக்கு முன்பு, மதுரையில் இருந்து, திருப்பூருக்கு அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற முத்துகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார். மதுரை-காளவாசல் பகுதியில் பேருந்தை ஒட்டி சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த நபர், காருக்கு வழி விடவில்லை எனக்கூறி பேருந்து டிரைவர் முத்துகிருஷ்ணனை தாக்கி, பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சட்ட உரிமைகள் கழகம் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சோலைக்குமார், செயலாளர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனால், நத்தத்தில் இருந்து அலங்காநல்லூர், சிங்கம்புணரி, வி.எஸ்.கோட்டை, மதுக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள், காலை 5 மணியில் இருந்து 8 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.