நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் பதிவுக்கு குவிந்த கூட்டம்; கொரோனா பரவும் அபாயம்

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் பதிவுக்கு குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-02 11:07 GMT

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் பதிவுக்காக குவிந்த கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் கார்டுக்காக விண்ணப்பிக்க குவிந்த மக்களால், சமூக விலகல் காற்றில் பறந்தது.

நத்தம்- திண்டுக்கல் சாலையில் நத்தம்தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இ - சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, பள்ளிகளில் சேர்த்தல், வங்கிகளில் கணக்கு, அரசு தொடர்பான சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் கார்டுக்காக விண்ணப்பிக்க, பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

மக்களை வரிசைப்படுத்த தடுப்புகள் உட்பட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மேலும், கூட்டத்தை முறைப்படுத்தவும் அதிகாரிகள் முயற்சி செய்தும் முடியாததால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வந்து சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்லி கூறியும் பொதுமக்கள் பின்பற்றவில்லை.

இதனால், கொரோனா பரவும் அபாயம்  ஏற்பட்டதால், ஆதார் பதிவு தொடர்பான பணிகள் முறையாக நடைபெறவில்லை. வங்கிகளில் சிறுசிறு ஆதார் திருத்தங்கள் மட்டுமே நடைபெறுவதால், அரசு இ-சேவை மையத்தில் அதிக அளவு பொதுமக்கள் கூடினர். இதை தவிர்ப்பதற்கு ஆதார் மையத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் முன்புபோல தனியார் இ -சேவை மையங்களுக்கும் ஆதார் எடுப்பதற்கான பணியை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News