காருடன் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் 12 மணி நேரத்தில் மீட்பு
நத்தம் அருகே காருடன் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் 12 மணி நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரிய மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று குட்டுப்பட்டி அருகே தி.நகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் பெரியசாமியை காருடன் கடத்தி சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக பெரியசாமியின் செல்போனுக்கு வந்த போன் கால்களையும் போலீசார் விசாரித்தனர். அப்போது மேலூர் பகுதியில் அவருடன் பேசிய நபர்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மேலூர் பகுதிக்கு போலீசார் சென்றபோது சருகுவலையபட்டி பகுதியில் பெரியசாமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் நத்தம் கொண்டு வந்து அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கடத்தப்பட்டது தெரிய வந்தது. காலையில் கடத்தப்பட்ட பெரியசாமியை 12 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.