மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங்: கோவை, திண்டுக்கல் அணி முதலிடம்
சின்னாளப்பட்டி 9 வது மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டரங்கில், ஜூனியர் மற்றும் சீனியர் மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கடலூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என 23 அணிகள் பங்கேற்றன.
இதில் சிறப்பாக விளையாடிய 12 ஆண்களும், 12 பெண்களும், தமிழ்நாடு அணிக்காக டிசம்பர் மாதம் கர்நாடகா பெல்காமில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். 3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், இறுதிப்போட்டி நாக்அவுட் முறையிலும் நடைபெற்றன.
இதில், 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் அணியில், கோவை அணி முதலிடமும், சிவகங்கை 2ம் இடமும் பெற்றது. பெண்கள் அணியில் மதுரை அணி முதலிடமும், கோவை அணி இரண்டாம் இடமும் பெற்றது. சீனியர் பிரிவு ஆண்கள் அணியில் மதுரை முதலிடமும், கடலூர் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி முதலித்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா வழங்கினார். தமிழ்நாடு ரோல் பால் சங்க துணைத்தலைவர் ராபின் ராஜகாந்தன், தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளை திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளர் பிரேம்நாத் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.