இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், லாரி மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹார தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (வயது 36) . கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள ஸ்விக்கி என்ற தனியார் உணவு நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் உள்ளார். இதனால் கிருஷ்ணன் தினமும் ஆத்தூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று கிருஷ்ணன் வேலை முடிந்து திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதால் விபத்தின்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.