தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கை
தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் பிற மாவட்டங்களுக்கு உரங்கள் கொண்டு செல்வது குறித்து வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை கிடைத்துள்ளதால் விவசாயிகள் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரம் விற்பனை நிலையங்களிலும் இருப்பு கூட்டு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உரங்கள் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்து கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும் தர்மபுரி மாவட்டத்திற்குள் கொண்டுவர தடை உள்ளது.
இதை கண்காணிக்கும் வகையில் தர்மபுரி வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு), தாம்சன் மற்றும் வேளாண்மை அலுவலர், காரிமங்கலம் கனகராசு ஆகியோர் மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டி எல்லை செக்போஸ்டில் திடீர் ஆய்வு செய்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆய்வின் போது சோதனை சாவடி காவலர்கள் ஆறுமுகம் மற்றும் மாதப்பன் உடனிருந்தனர். இவ்வாறு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், வசந்தரேகா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படவிளக்கம்
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கை செய்தனர்.