பாலக்கோடு அருகே இன்று காலை ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை: பொதுமக்கள் அச்சம்
பாலக்கோடு அருகே இன்று காலைஊருக்குள் நுழைந்த ஒற்றை யானையால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நேற்று பஞ்சப்பள்ளி வனப்பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒரு யானை சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. பாலக்கோடு வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத் துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஒற்றை யானை ஒன்று மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், நல்லூர், கரகூர், பெல்ரம்பட்டி, சீங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் நுழைந்தது. தொடர்ந்து ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் சத்தமில்லாமல் வனப் பகுதியை நோக்கி சென்றுள்ளது.
ஆனால் யானை விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சென்றதால், ராகி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மிதித்து நாசம் செய்துள்ளது. தொடர்ந்து ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்தது அறிந்த கிராம மக்கள் அச்சமடைந்து, பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் வருவதற்குள்ளாகவே எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல், ஒற்றை தானை அமைதியாக வனப் பகுதியை நோக்கி சென்று உள்ளது. தொடர்ந்து ஊருக்குள் வந்த ஒற்றை யானையை கிராமமக்கள் சத்தமிட்டும், மேளம் அடித்தும் வனப் பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.
பாலக்கோடு பகுதியில் திடீரென ஒற்றை யானை திடீரென ஊருக்குள் நுழைந்தால் பெரும் கிராம மக்களிடையே அச்சமும், பரபரப்பு ஏற்பட்டது.