தர்மபுரி: தொழில் முனைவோர் கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்ட இளம் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2021-09-25 00:45 GMT

தர்மபுரி மாவட்ட தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கை, கலெக்டர் திவ்யதர்சினி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், மாவட்ட இளம் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தலைமையேற்று பேசியதாவது:

தர்மபுரி மாவட்டம் என்பது வேளாண்மை, தோட்டக்கலை தொழில்களில் வளம் சார்ந்த மாவட்டம் ஆகும். மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் தொடங்க அனைத்து சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ளது.

வேலைவாய்ப்புகளை பெருக்கவும், தொழில் வளங்களை மேம்படுத்திடவும் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்றோர், இளம் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டங்களின் மூலம் தகுதியுடைய அனைவரும் புதிய தொழில்களை தொடங்கி தாங்களும் தொழில் முனைவோர் ஆகலாம். இதன் மூலம் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிடலாம்.

புதிய தொழில்களை தொடங்கும்போது,  தங்கள் பகுதிகளில் உள்ள தொழில்வளம் சார்ந்த தொழில்களை தொடங்கினால்,  அது லாபகரமானதாக அமையும். குறிப்பாக, வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் (Former's Production Organization) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை இலாபகரமான முறையில் சந்தைப்படுத்த இயலும்.

தருமபுரி மாவட்டத்தில் மாம்பழம், தக்காளி போன்ற பழ வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இது போன்ற பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தினால், இதன் மூலம் அனைத்து நேரங்களிலும் அதிக இலாபம் ஈட்ட முடியும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யும் தொழில் வளங்களை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்டோ காம்பொனென்ட்ஸ், இன்ஜினியரிங் பிராடக்ட்ஸ் (Engineering Products), Agri and Agro based products, plastic products உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தர்மபுரி மாவட்டத்தில் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது போன்ற துறைகளில் தொழில் முனைவோர் அதிகம் கவனம் செலுத்தினால் ஏராளமான தொழில்களை தர்மபுரி மாவட்டத்தில் உருவாக்க முடியும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகும். இவ்வாறு, ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

தொடர்ந்து, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஜே.சி.பி வாகனங்கள் வாங்குவதற்கு 6 பயனளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பிலான காசோலைகளையும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சாக்லேட், மாட்டுத்தீவன வியாபாரம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, மளிகைக்கடை நடத்துதல், தையல் தொழில் மேற்கொள்ளுதல் மற்றும் ஆயத்த ஆடை தயாரித்தல் ஆகியவற்றிற்கு 6 பயனளிகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.30 இலட்சத்திற்கான காசோலைகளையும் என மொத்தம் 12 பயனளிகளுக்கு ரூ.2.91 கோடி மதிப்பிலான காசோலைகளை, ஆட்சியர்  வழங்கினார்.

இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.எஸ்.அசோகன் வரவேற்புரையாற்றினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துணை இயக்குநர் (சென்னை) ஆர்.செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.கண்ணன், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் எஸ்.பிரவின்பாபு, உதவி இயக்குநர் (இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு) ஜெயக்குமார், தர்மபுரி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு தலைவர் சரவணன் உள்ளிட்டவர்கள் பேசினர். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் ந.செல்வராசு நன்றி கூறினார்.

Tags:    

Similar News