காரிமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி சரக்கு வாகனத்துடன் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளுக்கு, அதிகப்படியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர்கள், ஆறுமுகம், குப்புசாமி ஆகியோர் கொண்ட குழுவினர், சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காரிமங்கலம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளை கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்திலிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் 2 டன் அளவில் 48 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2 டன் ரேசன் அரிசியுடன், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் குறித்து, குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்திலிருந்து, பெங்களூரு பகுதிக்கு அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.