பாலகோட்டில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு வேலைவாய்ப்பு, முழு சம்பளம் வழங்குதல், 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றகோரி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் அதிகாரிகள் இவர்களை அழைத்து பேசாமல் அலட்சிய போக்கை கடைப்பிடித்ததாலும் போலீசார் போராட்டத்தை கலைக்க முற்பட்டதாலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாலக்கோடு டிஎஸ்பி தினகரன், மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் அசோக்குமார், டி.எஸ்.பி தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றுதிறனாளிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மாற்று திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததின் பேரில் மாற்று திறனாளிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தபோராட்டத்தில் மாநில பொருளாளர் சக்ரவர்த்தி கண்டன உரை நிகழ்த்தினார். வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்ட செயலாளர் திம்மன், மாவட்ட செயலாளர் கரூரான் உள்ளிட்ட ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.