பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பு திட்டப்பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், கூடுதல் கலெக்டருமான வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேளாரஅள்ளி ஊராட்சியில் திக்குவாசி கொட்டாய் பகுதியில் 2018-19 ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்த பேவர்பிளாக் அமைக்கும் பணி, இருமாம்பட்டி கல்லேரியில் 2019-20 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஏரிக்கோடி அமைக்கும் பணி, செம்மநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.3.61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சுவர் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பச்சயப்பன் என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் பண்ணைக்குட்டை பணி மற்றும் அத்திமுட்லு ஊராட்சியில் 2020-21 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார். இந்த திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன், உதவிப்பொறியாளர்கள் தமிழ்மணி, முருகேசன், பணி மேற்பார்வையாளர்கள் கண்ணன், மாணிக்கவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.