வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தால், தற்போது ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக, இரண்டு, மூன்று குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் போதிய இட வசதி இல்லாததாலும், போதிய வருவாய் இல்லாத காரணத்தினாலும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 8 ஏக்கர் அளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருந்து வருகிறது.
இந்நிலையில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக மாரண்டஅள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த மக்கள், அதிகாரிகள், அமைச்சர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் ஒரே வீட்டில் வசித்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர்.
தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு ஏற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.