பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த, 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.;
பாலக்கோடு அரசு பள்ளியில் படித்து போலீசாக தேர்வு பெற்றுள்ள , முன்னாள் மாணவர்கள்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2016முதல் 2019ம் ஆண்டு வரை படித்த மாணவர்களில் 14 மாணவர்கள் இந்த வருடம் விளையாட்டு துறை மூலம் போலீஸ் துறைக்கு தேர்வாகி சென்ற வாரம் போலீசாக பணி ஆணையை பெற்றனர்.
இவர்களின் சாதனையை பாராட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளியால் மாணவர்கள் பெருமையடைவதைப் போல் இந்த மாணவர்களால் பள்ளி பெருமை அடைவதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு முன்னேற்றங்களை பெற்று பணியில் சிறக்க வாழ்த்தினார்.
இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டி வெற்றி பெற செய்த தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், தட்சிணாமூர்த்தி, அறிவழகன் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.