மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை;
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதால், தர்மபுரி பாலக்கோடு வெள்ளிச்சந்தை மாரண்டஅள்ளி சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, காரியமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் ,அரூர் ,மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளிசாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, பாலக்கோடு வெள்ளிச்சந்தை, கம்பைநல்லூர், சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகிறது.
குறிப்பாக, பாலக்கோடு தக்காளி மண்டியில் இருந்து நாள்தோறும் 8ஆயிரம் முதல் 10ஆயிரம் கிரேடு தக்காளி ஏற்றுமதியாகிறது. ஒரு கிரேடு என்பது 30 கிலோ எடை கொண்டதாகும். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தக்காளி விளைச்சல் அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.3-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் தக்காளி பழங்களை சாலைகளில் கொட்டி சென்றும் தக்காளி தோட்டங்களில் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பரவலாக பெய்து வரும் மழையால் சீதோஷணநிலை மாறி தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று விவசாயிகளிடம் இருந்து தக்காளி கிரேடு தரத்தைப் பொறுத்து ரூ.1800 முதல் ரூ.2200-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-முதல் 100 மேல் விற்பனையாகிறது.
இதுதொடர்பாக, பாப்பிரெட்டிப்பட்டி அரூர், பாலக்கோடு, தக்காளி விவசாயிகள் கூறும்போது, மழையால் தக்காளி செடிகள் அழுகிவிட்டன. மேலும், மழையால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளதால் புதிதாக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்யவில்லை. இதன் காரணமாக பொங்கல் பண்டிகை வரை தக்காளி விலை உயர்ந்து காணப்படும்.
தற்போது உள்ள தக்காளி பழங்கள் அறுவடை 10 நாட்களில் முடிந்துவிடும். இதனால் தக்காளி கிலோ ரூ.100-ஐ கடக்கும். இன்று நிலவரப்படி தரத்தை பொறுத்து கிரேடு ரூ.2200 வரை கொள்முதல் செய்யப்பட்டது. 800 கிரேடு தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவையால் சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-முதல் 100 மேல் விற்பனையாகிறது என்றார்.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் அதிக விளைச்சல் வருகின்ற பொழுது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் கீழே கொட்டும் நிலையும் தற்பொழுது தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படும் பொழுது கிலோ 100க்கு மேல் விற்பனையாகிறது எனவே தக்காளிகளுக்கு என ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்து தக்காளியை பதப்படுத்தும் முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.