பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
பாலக்கோடு அருகே மொரப்பூர் காட்டுப்பகுதியில், யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மொரப்பூர் காட்டுப்பகுதி, கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர், தாசப்பன் மகன் முனுசாமி என்கிற எலப்பையன்(68). இவா், காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை தாக்கியதாக தெரிகிறது. இதில், அவரது உடல் பாகங்கள் நசுங்கி சேதமடைந்து, உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காட்டுப்பகுதியில் முனுசாமி உயிரிழந்து கிடந்ததை பார்த்த சிலா், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மாரண்டஅள்ளி காவல்துறைக்கு தகவல் அளித்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனுசாமி, யானை தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு எதாவது காரணமா என விசாரனை செய்து வருகின்றனர்.