நிலம் இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு: அமைச்சர் உறுதி
வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க அமைச்சர் உறுதி அளித்தார்.
பாலக்கோடு தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் உறுதியளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதி விஐபி தொகுதியாகும். அங்கு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.
அங்கு அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் இடையேதான் தற்போதுவரை போட்டி உருவாகியுள்ளது. இதனிடையே பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவர் காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட எரிக்கொட்டாய், கொட்டாவூர், எட்டியானூர், மூர்த்தி கொட்டாய், முதலிப்பட்டி, கேத்தனஅள்ளி, உழவன் கொட்டாய், அனுமந்தபுரம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை செய்தார்.
அப்போது அவருக்கு பெண்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் பொதுமக்களிடம் அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் பேராதரவில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
அப்போது அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். செல்லும் இடமெல்லாம் இரட்டை இலைக்கு அமோக ஆதரவு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.