பாலக்கோடு வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநர் திடீர் ஆய்வு
பாலக்கோடு வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா.
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர்(தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), தாம்சன் பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பாலக்கோடு தனியார் உர விற்பனை நிலையங்களில் மற்றும் பாப்பிநாயக்கனஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்யப்படுகிறதா, உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக்கப்படுகிறதா. உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்படுகிறதா, விவசாயிகளுக்கு உரங்களைவிற்பனை செய்யும் போது உரிய ரசீது வழங்கப்படுகிறதா, இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விபரங்களும் விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு விபரங்களும் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 1423 மெ.டன், டி.ஏ.பி 737 மெ.டன், பொட்டாஷ் 750 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2022 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 334-மெ.டன் இருப்பு உள்ளது எனவும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை பெற்று பயன் அடையுமாறு வேளாண்மை இணை இயக்குனர் வசந்தேரேகா கேட்டுக்கொண்டார்.