தங்கம் என நினைத்து கவரிங் செயின் பறித்த திருடனுக்கு 'காப்பு'
தங்கம் என நினைத்து பெண்ணின் கழுத்தில் இருந்து கவரிங் செயினை பறித்த திருடனை, துரத்தி பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைந்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாணியர் தெருவை சேர்ந்த சந்திரசேகரின் மனைவி பவித்ரா. இவர், திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனியாக வந்துள்ளார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திருமண மண்டபம் அருகே யாரும் இல்லாத இடத்தில் திடீரென பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த ஆரம் செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
அதிர்ச்சி அடைந்த பவித்திரா, திருடன், திருடன் என சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, நகை பறித்து சென்று ஓடிய திருடனை துரத்திச் சென்று பிடித்தனர். தொடர்ந்து திருடனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பஞ்சப்பள்ளி அடுத்த ஏரி பஞ்சப்பள்ளியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்தது.
மேலும், திருடன் பறித்துச் சென்ற நகை, தங்கம் இல்லை. சுமார் 1500 மதிப்புள்ள கவரிங் ஆரம் என்பது தெரிந்தது. இதனையடுத்து பவித்ரா கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் சாம்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்து சென்று, வாலிபர் கைதான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.