திருமல்வாடி அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு
திருமல்வாடி அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2005-2006 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கணபதி தலைமை தாங்கினார். செயலாளர் திருப்பதி வரவேற்று பேசினார். பொருளாளர் சிதம்பரம், ஒருங்கிணைப்பாளர்கள் முனிராஜ், திருமால், மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியரும், பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு தர்மபுரி மாவட்ட செயலாளருமான ஏ.இமானுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். அப்போது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தேவராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ - மாணவிகள் ஒருவருக்கொருவர் தனது பள்ளிப்பருவ காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினர். இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.விக்ரம் நன்றி கூறினார்.