சி.சி.டி.வி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பணிபுரிந்த அரசு அதிகாரி
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பணிபுரிந்த அரசு அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அதிகாரி, பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவிச்சந்திரனுக்கு சி.சி.டி.வி கேமரா இடைஞ்சலாக இருந்துள்ளது. எனவே கேமராவை துணியால் மூடிமறைத்து விட்டார்.
இன்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கவிருந்த நிலையில், கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து சில கோரிக்கைகளை முன்வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரனை சந்திக்க சென்றபோது கண்காணிப்பு கேமிராவை துணி சுற்றி மறைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மட்டும் துணி கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர்.
எத்தனை மாதங்களாக கேமரா மறைக்கப்பட்டுள்ளது என்றும், கேமராவை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் சிறிது நேரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட மற்றொரு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உதவியாளரை கொண்டு கேமராவில் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணியை அகற்றினார். இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அரசு அலுவலகத்தில் கேமராவிற்கு துணி சுற்றி மறைக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.