வாக்கு இயந்திரங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்
நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும், 151 வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
நாளை (6ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு 2500க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு தொகுதி வாரியாக எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியானது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பணியை எஸ்.பி. மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த பணியின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதில் 151 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. இந்த கருவியால் வாகனம் எங்கே செல்கிறது. மீண்டும் எப்போது வருகிறது போன்ற செயல்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.