பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
காலை உணவு திட்டத்திற்கென புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 111 ஆரம்ப பள்ளியில் பயிலும் 5400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இரண்டாம் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு ஆரம்ப பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 51,538 மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கென புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புர வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, தர்மபுரி நகரில் பிடமனேரியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 1873 வீடுகளுக்குட்பட்ட 10,000 மக்கள்தொகைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளின் போது நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராமன் விஜயரங்கன், சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.