திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை செய்யப்படும் என தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்டஅள்ளி அருகே தூள்செட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்காமல் மத்தியஅரசுக்கு தாரை வார்க்க அனுமதித்தார். நாங்கள் போராடிய பிறகே அந்த திட்டம் கைவிடப்பட்டது. கே.பி அன்பழகன் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது அலையாளம் பகுதியிலிருந்து- தூள் செட்டி ஏரிக்கு நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வராத நீட் தேர்வு, ஜெயலலிதா ஆட்சியிலும் வராத நீட் தேர்வு எடப்பாடி காலத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. இதனால் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் மக்களிடம் மருத்துவ அறிக்கையை தெரிவிப்பார்கள். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்று அனைத்து அமைச்சர்களும் பொய் கூறினார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவேன் என்று கூறினார்.