திமுக அமைச்சரின் மனைவி மரணம்: முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தொழிலாளர் நலன் துறை அமைச்சரின் மனைவி உயிரிழந்த நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆறுதல்;
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் மனைவி பவானி அம்மாள் நேற்று முன்தினம் காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்ற நிலையில், அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி உடலுக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விருத்தாசலத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்று உயிரிழந்த பவானி அம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசனுக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
அமைச்சர் கணேசன்- பவானி தம்பதிக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்துஜா என்ற நான்கு பெண் பிள்ளைகளும், வெங்கடேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகள் கவிதா லட்சுமி ஒரு ஆண்டுக்கு முன்புதான் கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார்.