விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்திய பொதுமக்கள்
விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. போலீசாரை கண்டதும் கிராம மக்கள் ஓடினர்;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்துவார்கள். அதில் அனைவரும் போட்டி, போட்டு மீன்பிடிப்பார்கள்.
இந்த ஆண்டு முன்கூட்டியே ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். மீன்களை பிடிக்க மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து போட்டி, போட்டு ஏரியில் மீன்பிடித்தனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர்.
மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.