விருத்தாசலம் அருகே ஏரியில் அரசுப் பேருந்து இறங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
திருப்பதியில் இருந்து சனிக்கிழமை தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து இரவு சுமார் 7.45 மணியளவில் புறப்பட்டு, தஞ்சாவூர் நோக்கி, வேலூர், விழுப்புரம் வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (37) என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பேருந்தானது, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூர் செல்லும் சாலையில், இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்து திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி நிலைத் தடுமாறி, புல்லூர் சாலையின் ஓரத்தில் உள்ள, நீர் நிரம்பி நிற்கும் பெரிய ஏரியின் உள்ளே எதிர்பாராத விதமாக இறங்கியது. அப்போது, ஓட்டுனர் பழனிசாமி மிகவும் சாமர்த்தியமாக பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதனால், அப்பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகளும், காயங்கள் ஏதுமின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.