வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது:23 டன் அரிசி பறிமுதல்
வேப்பூர் அருகே கடத்தி வரப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் போலீசார் கைது செய்தனர்.;
கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திட்டக்குடி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, இன்று அதிகாலை சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார், அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
லாரி ஓட்டுனரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் வேப்பூர் பகுதியில் இருந்து, வேலூருக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. லாரி மற்றும் அதில் இருந்த 23 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனர் புருஷோத்தமன், கிளீனியர் பெருமாள் .ராமசந்திரன், கடத்தலில் ஈடுபட்ட மங்களூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்.ராமலிங்கம் ஆகியோரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.