ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆபத்தை உணராமல் சீர்வரிசையுடன் ஆற்றை கடந்த மக்கள்
கடலூர் மாவட்டம் நெடுஞ்சேரி - பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் மக்கள் சீர்வரிசைகளுடன் ஆற்றைக் கடந்து சென்றனர்.
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் ஏரிகள் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்தும் ஆறுகளில் குளிக்கவேண்டும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக தடுப்பணை சுவர் நிரம்பி சேத்தியாதோப்பு வழியாக உபரி நீர் கடலில் கலக்கிறது.ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீநெடுஞ்சேரி- பவழங்குடி கிராமத்திற்கு இடையே பாலம் இல்லாததால் திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரையும் பொருட்படுத்தாமல் திருமண சீர் வரிசையுடன் ஆற்றை கடக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சுமார் 17 கோடி செலவில் தடுப்பணை சுவர் கட்டப்பட்ட நிலையில் மேம்பாலம் அமைக்காமல் உள்ளது.பவழங்குடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீ நெடுஞ்சேரி கிராம மக்கள் இடுப்பு அளவு தண்ணீரில் சீர்வரிசை சாமான்கள் எடுத்துச் செல்லும் ஆற்றைக் கடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பவழங்குடி கிராமத்திற்கு பேருந்தில் பயணம் செய்தால் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றி கருவேப்பிலங்குறிச்சி வழியாக சென்றடைய வேண்டும், இதனால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர். ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.