காட்டு மன்னார் கோவில் அருகே மாற்றுத்திறனாளி இளைஞரை மணந்த இளம்பெண்
காட்டு மன்னார் கோவிலில் மாற்றுத்திறனாளி வாலிபரை முகநூலில் 4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் பட்டதாரி பெண்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி வட்டகுலம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (29). மாற்றுத்திறனாளி. இவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஜமுனா(21) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல் 4 வருடங்களாக முக நூல் புத்தகத்தில் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜமுனா வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது .
உடனே ஜமுனா வீட்டை விட்டு வெளியேறி காதலனைத் தேடி வேல்முருகன் சொந்த ஊரான குமராட்சிக்கு வந்துள்ளார். பின்னர் வேல்முருகனை சந்தித்த ஜமுனா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் உதவியுடன் குமராட்சி அருகே உள்ள அம்மன் கோவிலில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குமராட்சி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் அமுதாவிடம் தஞ்சம் புகுந்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வேல்முருகன் குடும்பத்தினருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.