சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா-பக்தர்கள் சுவாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்த நிலையில் தேரோட்டம் நடந்தது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, உள்ளிட்ட 5 சுவாமிகள் தேரோட்டம் வந்தபோது பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நேற்று காலை மகா அபிஷேகம், லட்சார்ச்சணை, திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது கோயிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நடராஜரை வழிபட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
சுவாமி வருவதற்கு முன்னரே கோயிலுக்குள் செய்தியாளர்கள் நின்றிருந்த கிணற்று பகுதிக்கு வந்த சில தீட்சிதர்கள், செய்தியாளர்கள் சிலர் சுவாமி தெரியும்படி புகைப்படம், வீடியோ எடுப்பதாகவும், அதனால் சுவாமி வரும்போது செய்தியாளர்கள் யாரும் படம், வீடியோ எடுக்க கூடாது எனவும் கூறினார். இதனால் சில செய்தியாளர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேரே தீட்சிதர்கள் சிலர் மிகப்பெரிய மறைப்புத்துணி ஒன்றை கட்ட முயன்றனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் துணியை கட்டாமல் சென்று விட்டனர்.
வழக்கமாக நடராஜர் கோவில் தரிசன விழா மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை நடைபெறும் ஆனால் இந்த ஆண்டு மாலை 6 மணிக்கு மேல்தான் தரிசனம் நடந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணவு, இயற்கை உபாதை கழித்தல் போன்றவற்றிற்காக கடும் அவதிப்பட்டனர்.