மாலை மரியாதையுடன் பள்ளியில் அமர வைக்கப்பட்ட இருளர் இன மாணவர்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் மாலை மரியாதையுடன் பள்ளியில் இருளர் இன மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.;
சிதம்பரம் அருகே கிள்ளையில் இருளர் இன மாணவ மாணவிகள் மாலை மரியாதையுடன் உயர்நிலைப்பள்ளியில் அமர வைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது கிள்ளை பேரூராட்சி. இந்த பேரூராட்சி இருளர் இன மக்களுக்காக (மகளிர்) ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூராட்சியின் தற்போதைய தலைவராக இருப்பவர் மல்லிகா. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய(இருளர் பழங்குடியினர்) நடுநிலைப் பள்ளியில் படித்து எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் மாலை அணிவித்து கிள்ளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள். இவர்களுக்கு தேவையான சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை பேரூராட்சி மன்ற துணை தலைவரும் வழக்கறிஞருமான கிள்ளை ரவீந்திரன் வாங்கி கொடுத்தார்.
கலைஞர் நகர் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் சேராமல் இடைநிற்றல் தொடர்ந்தது. எனவே இந்த கல்வி ஆண்டில் இடைநிற்றலை தடுக்கவும், இருளர் பழங்குடி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இந்த பள்ளியில் 8ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களது பெற்றோர்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து 9ம் வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அப்போது 9ம் வகுப்பில் இருந்த பழைய மாணவர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்று அவர்கள் அனைவரையும் முதல் பெஞ்சில் அமர வைத்தது மிகவும் தெகிழ்ச்சியாக இருந்தது.
இப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்திய கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரையும் பொதுமக்கள் சார்பாகவும் பரங்கிப்பேட்டை ஒன்றிய கல்வித்துறை சார்பாகவும் கலைஞர் நகர் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிக அளவில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். கல்வியில் அவர்கள் பின்தங்கி இருப்பதற்கு இடைநிற்றல் தான் காரணம் என்பதை கண்டறிந்து அதனை தடுப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எடுத்த இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.