அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி னர்.;
கடலூரில் பயிற்சி டாக்டர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த கல்லூரியை கடந்த ஆண்டு அரசு கல்லூரியாக தமிழக அரசு அறிவித்து தற்போது கடலூர் மாவட்ட மருத்துவமனையாக இயங்கி வருகிறது.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு முடித்து விட்டு பயிற்சி மருத்துவராக மருத்துவ கல்லூரியில் 134 மாணவர்களும் பல் மருத்துவ கல்லூரியில் 71 பயிற்சி மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 25 ஆயிரம் போல் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிவரும் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை கல்லூரி நிர்வாகம் உடனடியாக விடுதிகளை காலி செய்ய வேண்டும் என ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
உரிமைக்கு போராடினால் அடக்கு முறையை கையாளும் நிர்வாகத்தை கண்டிப்பதாகவும் நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் பயிற்சி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.