அரசு மருத்துவமனையில் பெண்ணிற்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையால் பரபரப்பு

அரசு மருத்துவமனையில் பெண்ணிற்குஇறந்த நிலையில் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-28 13:15 GMT
சிதம்பரம் அரசு மருத்துவமனை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இருபத்தைந்து வயது இளவரசி.  இவரது கணவர் சிவலிங்கம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இளவரசி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.உடனே அவரை அருகிலுள்ள ஆயங்குடி அரசு சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு போதிய வசதி இல்லை என்று சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரியாக பத்து முப்பது மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளனர்.இந்நிலையில் இளவரசிக்கு அதிக அளவு வலி ஏற்பட்டதால் மருத்துவர்களிடம் உறவினர்கள் தெரிவித்த போது நீங்கள் மருத்துவரா? நான் மருத்துவரா என்று அவர்களிடம் அலட்சியமாகப் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே நள்ளிரவில் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாலை 4:00 மணி அளவில் இளவரசி அதிக அளவில் வலியால் துடிப்பதை அறிந்த மருத்துவ குழுவினர் சென்று பார்த்தபோது குழந்தை அசைவு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டு உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை அகற்றியுள்ளனர்.

குழந்தை பனிக்குடம் உடைந்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களை சமாதானப்படுத்தி புகார் பெற்று  சென்றுள்ளனர்.

மேலும் இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகள் இயங்கிவரும் நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியப் போக்கினால் இளவரசிக்கு   குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News