அபரிமிதமான திறமைகள் இருந்தும் முன்னேற முடியவில்லை- ஆளுநர் வேதனை
நிகழ்ச்சியை புறக்கணித்த அமைச்சர்கள் - திறமை இருந்தும் முன்னேற முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!;
தற்போது நாட்டில் உள்ள சூழல் தொழில்முனைவோருக்கு மிகவும் உகந்ததாக உள்ள நிலையிலும், நமது நாட்டில் அபரிமிதமான திறமைகள், வளங்கள் இருந்த போதிலும் நாம் தொடவேண்டிய உச்சத்தை தொட முடியவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் சென்னையின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலை, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,014 மாணவர்களுக்கு முனைவர், முதுகலை, இளங்கலைப் பட்டங்கள் மற்றும் டிப்ளோ பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் 73 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பதக்கங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, " இளம் மாணவர்களை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. உங்களில் சிலர் வேலை தேடுவார்கள். ஆனால் சில மாற்று வழிகளையும் சிந்தியுங்கள். மேலும் சிலர் புதுமைப்பித்தன்களாகவும், தொழில்முனைவோராகவும், வேலை கொடுப்பவர்களாகவும், வேலை தேடுபவர்களாகவும் இருக்க விரும்புவதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இந்த நேரத்தில், தற்போது நாட்டில் உள்ள சூழல் அமைப்பும் தொழில்முனைவோருக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.தொழில் முனைவோருக்கு உதவும் மூலதன நிதியைக் கண்டுபிடிப்பது இன்று மிகவும் கடினமானது அல்ல என்று சுட்டிக்காட்டிய ரவி, பல்வேறு திட்டங்கள் உள்ளன, இதன் கீழ் தொழில்முனைவோர் ஆபத்து இல்லாத அல்லது குறைந்த ஆபத்துள்ள மூலதனத்தைப் பெறலாம். தோல்வி உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள் ஆனால் தைரியமாக இருந்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
நமது நாட்டில் அபரிமிதமான திறமைகள், வளங்கள் இருந்த போதிலும் நாம் தொடவேண்டிய உச்சத்தை தொட முடியவில்லை" என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.