சிதம்பரம்: மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பை புறக்கணித்த மாணவரை பிரம்பால் அடித்து காலால் உதைத்து கடுமையாக தாக்கிய ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என இரு தரப்பினரிடம் செய்யப்பட்ட விசாரணையில், "இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர் தான் இயற்பியல் நோட்டு எடுத்துவரவில்லை, அதை எடுத்து வருவதாக அனுமதி பெற்று வெளியேறியுள்ளார். ஆனால் ஏற்கனவே பள்ளியின் மூன்றாவது மாடியில் வகுப்பைப் புறக்கணித்திருந்த 7 மாணவர்களுடன் குமரன் இருந்துள்ளார். அப்போது ஆய்விற்கு சென்ற சென்ற தலைமை ஆசிரியர் மாடியில் குமரன் உட்பட 8 மாணவர்கள் இருப்பதைக் கண்டதும், அவர்களை அழைத்து வந்து வகுப்பில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து வகுப்பை புறக்கணித்து சென்ற குமரனை தவிர்த்து மற்ற மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்து வகுப்பறையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து குமரனை பிரம்பால் அடித்து காலால் உதைத்து தன்னிடம் பொய் கூறியதை ஏற்க இயலாது என்று கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து ஆவணம் செய்யப்பட்ட வாக்கு மூலம் மற்றும் காணொளி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த ஆசிரியர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.