கோவையில் பெண் வேடமிட்டு மாணவிகள் விடுதியில் செல்போன், லேப்டாப் திருட்டு? பலே ஆசாமி கைது
கோவை, பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் பெண்கள் உடையில் சுற்றித்திரிந்த நபரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் பெண்கள் உடை அணிந்து சுற்றித்திரிந்த மர்ம நபரை வடவள்ளி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு பிளாக்குகளில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த மாணவியர் விடுதிக்குள் கடந்த சில வாரங்களாக மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவிகள் புகார் அளித்து வந்தனர். தொடர்ந்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவிகள் விடுதி வளாகத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரவு நேரத்தில் ஆயுதத்துடன் மர்ம நபர் சுற்றிய வீடியோவுடன் மாணவிகள் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பிடிபட்ட நபர் கல்வீராம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பெண்கள் உடை அணிந்து இரவு நேரத்தில் மாணவிகள் விடுதிக்குள் சென்று லேப்டாப் மற்றும் செல்போன்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.