தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ரூ.1000 கோடி ஊழல்: எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-01-20 06:15 GMT

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா.

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 ரொக்க தொகையாக வழங்கிய போது, ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக கலப்படமாக இருப்பதாகவும் கூறிய அவர், பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு தமிழக அரசு இதில் நாடகம் ஆடுவதாகவும், கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்ததாகவும், மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் உ.பி.அரசிற்கு வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார். 

Tags:    

Similar News