கொரோனா பரவலை தடுக்க புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுரை

டாஸ்மாக் கடைகளை தான். அதை மூட வில்லை எனில் எந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் பலனளிக்காது என்று கூறினார்.

Update: 2021-04-15 07:00 GMT

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கொரொனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அச்சமின்றி இருக்க முடிந்தது. தேர்தல் பரப்புரை துவங்கிய பின்பு மெல்ல மெல்ல அதிகரித்து, கடந்த காலத்தை விட கொரொனா வேகமாக பரவி வருவது கவலை அளிக்கின்றது. மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு இதை கட்டுப்படுத்த வேண்டும். ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் என்ற முறையில் இல்லாமல் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலே அது 99 சதவீதம் கொரொனா என்ற அடிப்படையில் சிகிச்சை துவங்க வேண்டியது அவசியம்.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு வந்தால் அதை தாங்கும் நிலையில் இல்லை. தடுப்பூசி போடுவதில் சுணக்கம் இருப்பதாகவே தெரிகின்றது. தடுப்பூசி ஒன்றுதான் உயிரிழப்புகளையும், நோயின் தாக்கத்தையும் குறைக்கும். முதலில் மூட வேண்டியது டாஸ்மாக் கடைகளை தான். அதை மூட வில்லை எனில் எந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் பலனளிக்காது.

அரசியல் கட்சிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆளுநரே இந்த குழுவை அமைக்க வேண்டும். மாநில, மாவட்ட அளவில் அரசியல் கட்சிகளை கொண்ட குழு அமைக்க வேண்டும். அபராதம் விதிப்பது, காவல் துறை மூலம் நடவடிக்கைகள் எடுப்பது போன்றவை தவறான நடவடிக்கைகள். அதை கைவிட வேண்டும்.

தேர்தல் ஆணையம் தவறிழைத்ததன் காரணமாக தொற்று வேகமாக பரவியது. தொற்று காலத்தில் தேர்தலை நடத்தாமல் 3 மாதகாலம் ஒத்தி வைத்திருக்கலாம். மத்திய அரசும் இந்த நேரத்தில் தேர்தல் நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கலாம். மத்திய அரசும் கொரொனா விவகாரத்தில் கடமை தவறி விட்டது. மத்திய மாநில அரசுகளின் தலைமை சரியில்லாமலும், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களின் தன்னலத்திற்காகவும் செயல்படுவதால் இந்த தொற்றை தடுக்க முடியவில்லை. பதவிகளில், ஆட்சியில் இருப்பவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அங்கே நூலிழை தவறுகள் ஏற்படும் போது மக்களிடம் 100 சதவீத தவறுகள் ஏற்படுகின்றது" என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News