தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்
கோவை மாவட்டத்தில் 107 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.;
தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநகரப் பகுதிகளில் 43 மையங்களிலும் புறநகரப் பகுதிகளில் 64 மையங்களிலும் என 107 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சிறப்பு முகாம்கள் மூலம் 10 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை அரசு பள்ளியிலும் கடந்த சில தினங்களாக சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது.
இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறித்த மாவட்ட நிர்வாகத்தின் பட்டியலில் ஆலந்துறை அரசு பள்ளி இடம்பெறாத நிலையில், ஆலந்துறை அரசுப் பள்ளியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. இதன்பேரில் அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆலந்துறை அரசுப் பள்ளி முன்பு திரண்டனர். பல மணி நேரமாகியும் டோக்கன் வழங்கும் பணியும் தடுப்பூசி வழங்கும் பணியும் நடைபெறவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊரகப் பகுதிகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்க வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீசார், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் மாதவ ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக விளக்கி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.