பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜை கண்டித்து போராட்டம் : ஹெச்.ராஜா கைது
பெண் உரிமை என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுப.வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.;
பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும், கேரளாவின் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்பாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எச். ராஜா கூறியதாவது:
பெண் உரிமை என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுப.வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக துணைவேந்தர் நானே மனதார கருப்பு சட்டை போட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு தி.க உடன் இணைந்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு செல்லலாம். ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இதுபோல தி.க அமைப்பினர் மற்றும் ஒரு சார்பாக நடத்துவது மதவெறி தூண்டுவதாக உள்ளது. இதுபோல் நடைபெற்றால் இந்து அமைப்புகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கல்லூரியின் துணை வேந்தர் காளிதாஸ் கூறியதாவது:
கல்லூரியில் கடந்த 17ம் தேதி சமூக பணித்துறை சார்பாக பெண்கள் உரிமை எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுப.வீரபாண்டியன் மற்றும் ஓவியா கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் இவர்கள் பெண்ணுரிமை மட்டும் தான் பேசினார்கள். பெரியார், பாரதியார் ஆகியோர் எப்படி பெண்ணுரிமைக்காக பாடுபட்டார்கள் என்பது குறித்து பேசினார்கள். கல்லூரியில் மத தூண்டுதலை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது, அரசியல் மற்றும் அமைப்புகளை இழிவாகவோ பேசவில்லை. எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இங்கு இல்லை. அடுத்ததாக ஆசிரியர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்களுடன் அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதே ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.