கோவையில் சிறப்பு காவல்படை ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவையில், குடும்ப பிரச்சனை காரணமாக சிறப்பு காவல்படை ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். 57 வயது. இவருடைய மனைவி, மகன்கள் சென்னையில் குடியிருந்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் முகாமில் இருந்த செல்வராஜ், இன்று பிற்பகல் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். அறையில் உள்ள மின்விசிறியில், லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது அறைக்கு சென்ற காவலர்கள், செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடலை மீட்ட சக காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.