நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: தொற்று பாதிப்பு அபாயம்
நொய்யல் ஆற்றங்கரையில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், களிம்பு போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.;
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு சமவெளி பகுதிகளில் 180 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வரும், நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து புட்டுவிக்கி பாலம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றங்கரையில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், களிம்பு போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இக்கழிவுகளால் அப்பகுதியில் மேயும் கால்நடைகளும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில் விஷமிகள் சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ள சூழலியல் ஆர்வலர்கள், இது மனித குலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அபாயகரமான கழிவுகளை ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், நீராதாரங்களில் கழிவுகளை கொட்டுவோரை பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.