குளமா? குப்பைத்தொட்டியா? மனசாட்சியின்றி மருத்துவக்கழிவு கொட்டும் விஷமிகள்!
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தில், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம், 2010ஆம் ஆண்டு முதல், மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 1295 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில், ஆகாயத்தாமரை படர்தல், கழிவுநீர் கலத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. இது போதாது என்று, மருத்துவக் கழிவுகளையும் கொட்டத் தொடங்கியுள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பெரிய குளத்தின் கரையில் மர்ம நபர்கள் சிலர், மருத்துவக் கழிவுகளைக் கொட்டி செல்வது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஏற்கனவே கொரோனா நோய்தொற்று அதிகம் உள்ள சூழலில், நகரின் மையப்பகுதியில் உள்ள குளக்கரையில், கொஞ்சமும் மனசாட்சியின்றி மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வது, வேதனையளிப்பதாக உள்ளது.
இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுகளை கொட்டியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.