கோவையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகளில் கரைக்கவும், தமிழக அரசு தடை விதித்தது. மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கும் அனுமதியளித்த தமிழக அரசு, கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
கோவையில் பொதுமக்கள் பலர், தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அதேபோல இந்து முன்னணி, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், தனியார் இடங்களில் சிறிதும் பெரிதுமாக, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், சுமார் 2500 காவலர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 300 சிலைகளை பறிமுதல் செய்து, அவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் பணியினை காவல்துறையினர், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய 15 குழுக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனோ கட்டுப்பாடுகள் காரணமாக, இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும், மதியம் ஒரு மணிக்கு பிறகு வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆர்.எஸ் புரம் முத்தண்ணன் குளத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக முத்தண்ணன் குளத்தில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எடுத்து வரப்படும் சிலைகள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள 45 நீர்நிலைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.