ஊருக்குள் சென்ற யானைக் கூட்டம்! அச்சமடைந்த பொதுமக்கள்!

நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்திருக்கிறது

Update: 2023-03-05 06:57 GMT

மதுக்கரை வனத்திலிருந்து ஊருக்குள் புகுந்த யானைகள்

கோயம்புத்தூர் மதுக்கரை வனச் சரகத்துக்குட்பட்ட காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வரும் நிலையில், சில யானைகள் ஊருக்குள் நுழைந்ததால் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் யானைகள் வாழ்ந்தாலும் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடிநீரைத் தேடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. தண்ணீருக்காக மட்டுமின்றி சில சமயங்களில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதம் செய்து விடுகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மதுக்கரை வனப் பகுதியை விட்டு 6 காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்டு யானைகள் நேராக மதுக்கரை வனத்தில் இருந்து பச்சாபாளையம் நோக்கி வந்ததாகவும், பின்னர் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

அதிகாலையில் தாங்கள் செல்லும் வழக்கமான வழித்தடத்தில் போகாமல் கோவைப்புதூர் அருகே இருக்கும் பச்சா பள்ளியில் மக்கள் வாழும் பகுதிக்குள் 6 யானைகளும் குட்டியுடன் நுழைந்திருக்கிறது. ஊருக்குள் குட்டியுடன் யானைகள் நுழைந்த செய்தி தெரிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தபடியே தெருவில் நடந்து சென்ற யானைக் கூட்டத்தை பார்த்தனர். திடீரென இவ்வளவு யானைகள் கூட்டமாக வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனத்திற்குள் விரட்ட முயற்சி செய்தனர். நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்திருக்கிறது. அதன் பிறகு யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் பின்னர் இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வரவே கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். 

Tags:    

Similar News