கோவை வனப்பகுதியில் குளத்தில் விளையாடிய மகிழ்ந்த யானைகள்!

கோவையில், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டிற்கு அருகே உள்ள குளத்தில் இறங்கி, 2 யானைகள் குளித்து விளையாடி மகிழ்ந்தன.

Update: 2021-06-16 02:24 GMT

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த செம்மேடு பகுதியில் உள்ள முட்டத்து வயல் என்ற குளம் உள்ளது. அந்த குளத்தில் அதிகாலை நேரத்தில்  2 ஆண் யானைகள் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள்,  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த இரண்டு ஆண் யானைகளும் காட்டை விட்டு வெளியே வர முயற்சித்தபோது, வனக்காவலர்கள் அதனை தடுத்து மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி இருந்தனர். அந்த யானைகள் மீண்டும் தாணிகண்டி என்ற பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டர்கள் வெளியேறி குளம் அமைந்துள்ள பகுதிக்கு வந்ததாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளுக்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குளத்தில் சகதி ஏதும் இல்லாத நிலையில், யானைகளை பத்திரமாக காட்டுக்குள் அனுப்பப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, குளத்தில் ஆனந்தக்குளியல் போட்டு விளையாடி மகிழ்ந்த யானைகள், பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

Tags:    

Similar News